Skip to content
Aug 30 10

ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா?

by Ash-Sheikh T.Haidar Ali

அன்பின் சகோதரர்களே, இம்முறை ஷவ்வால் தலைப்பிறை உலகம் முழுவதும் ஒதே திகதியில் தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இருந்தாலும் அதனைப் பாழடிக்கின்ற ஒரு சாரார் அதற்காகத் தயாராகி வருகின்றனர். எனவே கள நிலவரங்களை ஒரு அலசலாக உங்களுக்கு இங்கே தருகின்றேன். சற்று நீளமான தாக இருந்தாலும் இதனை என்னால் முடியுமான வரை எளிமைப் படுத்தி இருக்கின்றேன். இதனை முழுமையாக வாசித்ததன் பின்னர் உங்களது குதர்க்கம் விதண்டாவாதங்கள் அற்ற ஆரோக்கியமான் எதிர்வினைகள் பின்னுட்டல்களை எதிர்பார்க்கின்றேன். குழுமத்தின் ஆரோக்கியத்தைப் பேணி கருத்துக்களைப் பரிமாறுவோம். இன்ஷா அல்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இம்முறை ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படும் நாள் 08.09.2010ம் திகதியாகும்.

08.09.2010
இலங்கை – கொழும்பு
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை இலங்கை நேரப்படி 08.09.2010ம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.

அன்றைய தினம் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 05.26 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.15 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 49 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.

அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு சந்திரன் கொழும்பில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.

ஆகவே 08ம் திகதி கொழும்பில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.

சஊதி அரேபியா – மக்கா
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை சஊதி அரேபிய நேரப்படி மக்கா நகரில் 08.09.2010ம் திகதி பிற்பகல் 01.30 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.

அன்றைய தினம் சஊதி அரேபியா மக்கா நகருக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 01.55 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.33 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 4 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.

அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.24 மணிக்கு சந்திரன் மக்காவில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 09 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.

ஆகவே 08ம் திகதி மக்காவில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.

உலகம்
08.09.2010 ம் திகதி உலகின் எந்த ஒரு நிலப் பிரதேசத்திலும் ஷவ்வால் தலைப் பிறை தென்படுவதற்கான சாத்தியப்பாடுகள் கிஞ்சித்தும் இல்லை.

09.09.2010
இலங்கை – கொழும்பு
இத்தினத்தில் கொழும்பில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 24 மணித்தியாலங்களும் 46 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 41 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 01.88 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 10 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் தெளிவாக வெற்றுக் கண்களுக்குப் புலப்படும்.

எனவே இன்ஷா அல்லாஹ் றமழான் 29 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.

சஊதி அரேபியா – மாக்கா
இத்தினத்தில் மக்காவில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 28 மணித்தியாலங்களும் 38 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 34 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 02.33 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 06 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் சாத்தியம் உண்டு. இன்ஷா அல்லாஹ்.
எனவே றமழான் 30 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.

உலகம்
இவ்வருடம் ஷவ்வால் தலைப்பிறையானது 09.09.2010ம் திகதி சர்வதேச தேதிக்கோட்டுப் பகுதியில் (பிஜி தீவுகள்) முதன் முதலில் தென்படும் இன்ஷா அல்லாஹ். அதனைத் தொடர்ந்து உலகின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அவ்வப்ப பிரதேசங்களுக்குரிய சூரிய அஸ்த்தமனத்தின் போது அங்கே தலைப்பிறை தென்படும்.

ஆதலால் எதிர்வரும் 10.10.2010ம் திகதி உலகம் முழுவதும் ஒரே நாளில் ஈதுல் பித்ர் ஆக இருக்கும்.

சர்வதேச பிறையைப் பின்பற்றினால்…
உலகில் தலைப்பிறை முதலில் பிஜி தீவில் (GMT + 12) தென்படும் போது (09.09.2010 வியாழன் மாலை 06.30 மணி) ஹவாய் தீவில் (GMT – 10) 08.09.2010 புதன் கிழமை மாலை 04.30 மணியாக இருக்கும். பிஜியில் 09ம் திகதி தலைப்பிறை கண்ட தகவல் ஹவாய்க்கு 08ம் திகதி மாலையே கிடைத்து விடும். அதாவது ஒரு நாள் முன்னதாக.

பிஜியில் கண்ட தலைப் பிறையை உடனடியாகவே ஹவாயில் ஏற்றுக் கொண்டால் அங்கே 09ம் திகதி வியாழக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும் அதே வேளை பிஜியில் 10ம் திகதி வெள்ளிக்கிழமையே நோன்புப் பெருநாளாக அமையும்.

எனவே என்ன நோக்கத்திற்காக சர்வதேசப் பிறை எனும் கருதுகோள் கையாளப் பட்டதோ அதே கருதுகோள் உலகில் இரு நாட்களில் நோன்புப் பெருநாளைக் கொண்டுவரப் போகின்றது.

தேசியப் பிறையைப் பின்பற்றினால்…
பிஜியில் 9ம் வியாழக்கிழமை திகதி தலைப்பிறை தென்படும் போது ஹவாயில் 8ம் திகதி புதன் கிழமையாக இருக்கும். ஆனால் அத்தினத்தில் ஹவாயில் தலைப் பிறை தென்படாது. பிஜியில் தென்பட்ட தலைப்பிறை (தேசியப் பிறை) ஹவாயை வந்தடைவதற்கு சுமார் 22 மணித்தியாலங்கள் எடுக்கும். அதாவது ஹவாயில் 09ம் திகதி வியாழக் கிழமை தலைப்பிறை தென்படும் (தேசியப் பிறை). அப்போது ஹவாயிலும் 10ம் திகதி வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும்.

இப்போது உலகம் முழுவதும் 10ம் திகதி வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும்.

எனவே இம்முறை சர்வதேசப் பிறை எனும் கருதுகோளின் தேவையை அவ்வந்த நாடுகளுக்குரிய தேசியப்பிறை பெற்றுத் தரப் போகின்றது. இன்ஷா அல்லாஹ்.

சஊதிப் பிறையைப் பின்பற்றினால்…
சஊதி அரேபியாவில் (றமழான் 29) 08ம் திகதி சூரியனுக்கு முன்னரே சந்திரன் அஸ்த்தமித்து விடுவதனால் அன்றைய தினம் ஷவ்வால் தலைப்பிறை தென்படும் சாத்தியம் அறவே இல்லை என்பதனை மேலே கண்டோம்.

இருந்த போதும், தாம் றமழானை சரியாகவே ஆரம்பித்தோம் என்பதனை உலகுக்குக் காட்டுவதற்கா அன்றைய தினம் சஊதியில் பிறை கண்டதாக சஊதி அரசு சாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான சாதிப்புக்களை பல தடவைகள் சஊதி மேற்கொண்டிருக்கின்றது. அவற்றை இங்கே தருகின்றேன்.

01. ஹி 1425 துல்ஹஜ் – 10.01.2005

02. ஹி 1427 றமழான் – 22.09.2006

03. ஹி 1428 ஷவ்வால் – 11.10.2007

04. ஹி 1429 ஷவ்வால் – 29.10.2008

இவை சூரியனுக்கு முன்னர் சந்திரன் அஸ்த்தமித்துவிட்ட நாட்களாகும். இந்நாட்களில் சஊதியில் தலைப்பிறை கண்டதாகச் சொல்லி அடுத்தநாள் புதிய மாத்தை ஆரம்பித்தார்கள்.

05. ஹி 1425 ஷவ்வால் – 12.11.2004

06. ஹி 1427 துல்ஹஜ் – 20.12.2006

07. ஹி 1428 துல்ஹஜ் – 09.12.2007

இந்நாட்களில் சஊதியில் தலைப்பிறை தென்பட்டதாக சஊதி அரசு சாதித்தபோது சூரியனுக்கு முன்னர் சந்திரன் அஸ்த்தமித்துவிட்டது மட்டுமல்லாமல், சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசை கூட ஏற்பட்டிருக்கவில்லை.

மனித குல வரலாற்றில் அமாவாசைக்கு முன்னதாக தலைப்பிறை தென்பட்ட அற்புதம் சஊதி அரேபியாவில் மட்டுமே நடந்து வருகின்றது.

உலக முஸ்லிம்கள் கூடுகின்ற ஹஜ்ஜின் போது உலக முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றிய பேச்சுக்களை மூச்சாகக் கூட விடமுடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முழு முஸ்லிம் உம்மத் எந்த வகையிலும் ஒன்று பட்டு விடக்கூடாது எனும் விடயத்தில் முனைப்புடன் சஊதி அரேபியாவுக்குள்ளும் வெளியேயும் செயற்பட்டுவரும் சக்திகள் ஒரே நாளில் பெருநாள் வருவதனயும் சகித்துக் கொள்ளப் பொவதில்லை.

எனவே சஊதியில் இருந்து ஏடாகூடமான பிரகடனங்கள் செய்யப்படுமிடத்து அதனை நாம் அப்படியே பின்பற்றுவோமானால் இம்முறை உலகம் முழுவதும் நாளில் (ஒரே நேரத்தில் அல்ல) ஈதுல் பித்ர் வருவது பாழாகிப் போகும்.

சஊதி அரேபியாவைப் பின்பற்றிக் கொண்டு சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதாக மக்களை சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதில்லை என்பதற்கான ஆதாரத்தை இங்கே தருகின்றேன்.

தலைப்பிறை கண்டதாக ஒரு முஸ்லிம் சாட்சி சொன்னால் அதனை குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அந்த முஸ்லிமின் சாட்சியத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இவர்கள் தலைப்பிறையை உறுதிப்படுத்திக் கொள்கின்ற வழி முறை. இந்தச் சாட்சியம் வானியலோடு உடன்படுகின்றதா என்பதனை இவர்கள் உரசிப் பார்ப்பதில்லை. ஏனெனில் வானியல் மனிதனது கண்டு பிடிப்பாம். அல்லாஹ் நாடினால் எப்போது வேண்டுமானாலும் தலைப்பிறையைக் காட்டுவானாம்.

சரி நாம் இவர்களது வழியிலேயே சென்று பார்ப்போம். கடந்த ஹி 1429 ஷவ்வால் தலைப்பிறையை 28.09.2008 ஞாயிற்றுக் கிழமை தாங்கள் கண்டதாக நைஜீரியா பிரகடனம் செய்து 29ம் திகதி திங்கட்கிழமை ஈதுல் பித்ரை அனுஷ்டித்தது. ஒரு முஸ்லிம் அல்ல ஒரு முஸ்லிம் நாடே இத்தினத்தில் பெருநாள் எடுத்த போது சஊதி அரேபியாவோ அல்லது நமது சர்வதேச பிறையாளர்களோ நைஜீரியாவுடன் சேர்ந்து பெருநாள் எடுக்கவில்லை. இவர்கள் அடுத்த நாளே சஊதியுடன் சேர்ந்து பெருநாள் எடுத்தார்கள். இதுபற்றிக் கேட்கப்பட்டபோது மௌனத்தைத் தவிர பதில் எமக்குக் கிடைக்கவில்லை.

இதிலிருந்து இரண்டு விடயங்கள் நமக்குப் புலனாகின்றன.

01. சஊதி அரேபியா சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதில்லை.

02. நமது சர்வதேசப் பிறையாளர்கள் சஊதியை அன்றி சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதும் இல்லை.

(மேற்கின் சல்லாப புரியாக மாறியிருக்கும் மத்திய கிழக்கின் மன்னனாக இருக்கும்) “சஊதி மாறினால் மட்டுமே நாமும் மாறுவோம்” என வேதாந்தம் பேசும் வித்தகர்கள் சத்தியத்தை மற்றவர்கள் அறியாமல் மூடி மறைத்துக் கொண்டு மந்திரித்து விட்டுக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அறியாமை தாண்டவமாடிக் கொண்டே இருக்கும்.

ஆனால், அறியாமை அழிவதாகவே இருக்கின்றது.

- Aqil Ahmad -

2006 - 2010 AlWahy! All rights reserved